கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினரும், நாடக, திரைக் கலைஞருமான ‘பூ’ ராமு காலமானார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் முற்போக்கு எழுத்தாளரான பூ ராமு. இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தார். இருப்பினும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணச் செய்தது.
அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.
குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ராமு, சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கும், கர்ணன் படத்தில் தனுஷுக்கும் அப்பாவாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், இதய சம்மந்தமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
பூ ராமுவின் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.