நடிகர் ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் அமைத்த மதுரை முத்துமணி திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், அவருக்கு முதல் முதலாக மதுரையில் ரசிகர் மன்றம் அமைத்து செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த முத்துமணி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
65 வயதான இவர், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில் தமிழகத்திலேயே முதன்முதலாக மதுரையில் மன்றம் துவங்கி பல்வேறு நற்பணிகளை செய்து வந்த முத்துமணி,கடந்த 1976-ம் ஆண்டு மதுரையில் நடிகர் ரஜினிகாந்த் முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கினார்.
அன்று முதல் தற்போது வரை ரஜினியின் தீவிர ரசிகராக வாழ்ந்தவர். இவரது திருமணம் ரஜினியின் வீட்டில் நடைபெற்றது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துமணியின் உடல் நிலை மோசமானது. இதனையடுத்து இல்லத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை கோ.புதூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு ரஜினியின் ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.