நடிகர் சித்தார்த், தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் இன்று (28.09.23) திரியரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்குகிறார்.
சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா. ஹீரோவான சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள்தான் படத்தின் கதை.
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசும் படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘சித்தா’.
மதுரையை சுற்றியுள்ள சிறுநகரங்களில் ஒன்றில் தன் அண்ணி மற்றும் அண்ணன் மகளுடன் வசித்து வரும் ஈஸ்வரன் (சித்தார்த்) சிறு வயதிலேயே தன் அண்ணனை இழந்ததால் குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தனது அண்ணியையும், அவரது மகள் சுந்தரியையும் பார்த்துக் கொள்கிறார்.

தான் வேலை செய்யும் அரசு அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளராக வரும் தன் பள்ளிகால காதலியுடன் மீண்டும் உறவை தொடருக்கிறார். இந்நிலையில், தன் அண்ணன் மகளின் பள்ளி தோழி பொன்னியின் வழியாக பெரிய சிக்கல் வருகிறது.
சிறுமி பொன்னியை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட, அந்தப் பழி சித்தார்த் மீது விழுந்துவிடுகிறது. அந்தப் பழியிலிருந்து மீண்டும் வரும் நேரத்தில், தன் அண்ணன் மகள் சுந்தரிக்கு நடக்கும் சில அசம்பாவிதங்கள் அவரை நிலைகுலையச் செய்கின்றன. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதி திரைக்கதை.
சித்தார்த்தின் மெச்யூரிட்டியான நடிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த ஆழமான சமூகப் பார்வை, பார்வையாளர்களின் நெஞ்சில் தைக்கும்படியான இயக்குனரின் கதை சொல்லல் முறை ஆகியவற்றுக்காக நிச்சயம் இப்படத்தை பார்க்கலாம்.