நடிகர் சூர்யா தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சூர்யா தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜெய் பீம்.
சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார்.
சாதி வெறிக்கு எதிரான அழுத்தமான வசனங்களுடன் வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை பேசும் ஜெய்பீம் படத்தை திரையோடு மட்டும் நின்று விடாமல் நிஜத்திலும் மாற்ற நினைத்த சூர்யா, இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினை நேரில் சந்தித்த சூர்யா மற்றும் ஜோதிகா ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.