நடிகர் விஜயை பார்க்க அனுமதிக்குமாறு அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நபர்கள் சிலர் வெற்றிபெற்றிருந்தனர். அரசியல் வட்டாரத்தில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது. அவர் அரசியலுக்கு வருதற்கான முன்னோட்டமாக இந்த வெற்றி அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில்,விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ரசிகர்களை சந்திப்பதற்காக நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு இன்று(24-10-21) வருகை தந்தார். தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் அவரது வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு விஜய் வாழ்த்து கூறினார்.
இந்த நிலையில் இந்தத் தகவல் அறிந்து விஜய்யின் வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர். ஆனால் அவர்களை பார்க்கவிடாமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து விஜய் வீட்டின் முன் அமர்ந்து ரசிகர்கள் சிலர் தங்களை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜயை பார்ப்பதற்கு அனுமதியளிக்கக்கோரி ரசிகர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பனையூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.