நிலவின் தென் துருவத்திற்கு சென்று ஆய்வை தொடங்கிய சாதனையை செய்து முடித்துள்ள இந்தியா அதே கையோடு சூரியனை ஆய்வு செய்ய கிளம்பிவிட்டது. அதன் முக்கிய நிகழ்வாக இன்று விண்ணில் ஏவப்படுகிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம். இத்திட்டம் குறித்து சற்று பார்க்கலாம்!
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும் சூரியக் காற்று போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தை தொடங்குவதே இந்தத் திட்டம்.
சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முறை அல்ல. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக ஆர்பிட்டர்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் திட்டம் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
மொத்தம், 1,480.70 கிலோ எடை உடைய அந்த விண்கலத்தை சுமந்தபடி PSLV-XL(C57) ராக்கெட், செப்டம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமையான இன்று காலை 11:50 மணிக்கு சென்னைக்கு வடக்கே 100கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்படுகிறது.
இந்த விண்கலம் சூரியனைச் ‘சென்று அடையாது’. இதன் இலக்கு பூமியிலிருந்து 15லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். “ஏவியதில் இருந்து ஆதித்யா-எல்1 அதன் இலக்கான எல்-1 (லாக்ரேஞ்ச் பாயிண்ட்) வரையிலான மொத்த பயணத்திற்கு சுமார் நான்கு மாதங்கள் ஆகும். 100-127 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது.
ஆதித்யா திட்டத்தின் பெயரில் உள்ள ‘L1’ என்பது ‘லக்ராஞ்ஜ்’ புள்ளியைக் குறிக்கிறது. இது சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி. இங்கு ஒரு விண்கலம் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி சமநிலையில் இருக்க முடியும்.
இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை பொறுத்தவரை, இந்த விண்கலம் மொத்தம் ஏழு உபகரணங்களைச் சுமந்து செல்லும். ஃபோட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் என அறியப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை, மின்காந்த மற்றும் துகள் புலங்களைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்திக் கண்காணிக்கும். இது விண்வெளி வானிலையை நிர்வகிக்கும் காரணங்களை ஆராயும். எடுத்துக்காட்டாக, சூரியக் காற்றின் இயக்கவியலைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்.
அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டவுடன், இந்த விண்கலம் “தடங்கல் இல்லாமல் சூரியனைப் பார்க்க’ வேண்டும். இது சூரியச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை கவனிக்க உதவும்” என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.
நமது வளிமண்டலத்தால் தடுத்து நிறுத்தப்படும் கதிர்வீச்சையும் இது ஆய்வு செய்யும். இதனை பூமியிலிருந்து ஆய்வு செய்ய முடியாது. அதன் இடத்திலிருந்து விண்கலத்தின் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ராஞ்ஜ் பாயிண்ட் L1-இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை அந்த இடத்திலேயே ஆய்வு செய்யும். இது கிரகங்களுக்கு இடையிலான விண்வெளியில் சூரிய இயக்கவியலின் விளைவு பற்றிய முக்கியமான தகவல்களை நமக்கு வழங்கும்.
சூரியனின் இயற்பியல் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல் போன்ற சூரிய அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று இஸ்ரோ நம்புகிறது. இத்திட்டதிற்கான செலவை பொறுத்தவரை இந்திய அரசாங்கம் 2019-இல் சுமார் 380 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு மற்றுமொரு விஷயமாக, ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி ஒரு தமிழர் என்பது தமிழர்களுக்கு மற்றுமொரு சிறப்பு. இந்நிலையில் இத்திட்டம் திட்டமிட்டபடி நிறைவேறும் பட்சத்தில், இந்தியாவின் விண்வெளித்துறை வளர்ச்சியில் மற்றுமொரு மெயில் கல்லாக அமையும். தற்போதைய இந்தியா மக்களின் பார்வை முழுவதும் ஆதித்யா எல் 1 மீதே உள்ளது.