மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று அதிமுக பொதுச் செயலாளரும், மாண்புமிகு எதிர்கட்சி தலைவருமான திரு. எடப்பாடியார் அவர்களை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அவருடன் மஜக பொருளாளர் மெளலா நாசர், தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்யது முகம்மது பாரூக், அவைத்தலைவர் மன்னை. செல்லச்சாமி, இணை பொதுச்செயலாளர் மவ்லவி J.S.ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் தாஜுதீன் ஆகியோரும் உடன் வருகை தந்தனர்.அப்போது முன்னாள் அமைச்சர் திரு. SP. வேலுமணி அவர்களும் உடனிருந்தார்.
பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்கு மத்தியில், அவரது அரசியல் பணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பிறகு மஜக சார்பிலான கோரிக்கை மனு ஒன்று எதிர்கட்சி தலைவரிடம் அளிக்கப்பட்டது.அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது….
சமீபத்தில் அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.இது தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்திற்கும், சமூக நீதிக்கும் நலம் பயக்கும் செய்தியாக அறிகிறோம்.தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட இது பெரிதும் உதவும் என நம்புகிறோம்.
மேலும், சமீபத்தில் அ.இ.அ.தி.மு.க நடத்திய மதுரை பொன்விழா மாநாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை குறித்து நல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதற்காக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறோம்.இந்த கருத்தியலில் தங்கள் கட்சியும் உடன்பட்டிருப்பது நம்பிக்கையூட்டுகிறது.
இந்நிலையில், சமூக வழக்குகள் தொடர்புடைய 36 முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட பலரின் விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுவதாக பரவலாக கருத்துள்ளது.
இவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் 161-வது சட்ட பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் .இத்தீர்மானத்தை ஆளுநர் மறுத்தாலும், அது சட்டப் போராட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில், தங்கள் தலைமையிலான அதிமுக அரசு 161-வது சட்ட பிரிவின்படி நிறைவேற்றிய அமைச்சரவை தீர்மானம் உதவிகரமாக இருந்ததை குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே இதை வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று கூட விருக்கும் தமிழக சட்டப்பேரவையில் தங்கள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.