எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவில் பேசியபோது, ’புரட்சி தலைவி எம்ஜிஆர்’ என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு ஒற்றைத் தலைமை என்ற ஒரே தீர்மானம் வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் அறிவித்ததால் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ்-க்கு எதிராகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக இந்த பொதுக்குழுவிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவிற்கு வருகை தந்தார்.
அவருக்கு ஆதரவாக ஈபிஎஸ் வாழ்க.. எடப்பாடியார் வாழ்க.. என அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பின. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தில் தனது தொண்டர்கள் சூழ வருகை தந்தார். அவருக்கு பெரிதாக தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை, இந்த நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் உரையாற்றினார். அப்போது தொண்டர்கள் ஆரவாரமாக கோஷங்கள் எழுப்பி எடப்பாடி பழனிசாமியை உற்சாகப்படுத்தினர். இதனால் திக்குமுக்காடி போன அவர், பேச்சை தொடங்கும்போதே, புரட்சி தலைவர் என்று கூறுவதற்கு பதிலாக ’புரட்சி தலைவி எம்ஜிஆர்’ என மாற்றி பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.