Agoram Arrested : ஆபாச வீடியோ இருப்பதாக தர்மபுர ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கடற்கரை ஓர கிராமத்தில் வைத்து ‘தூக்கி’ இருக்கிறது தமிழக காவல்துறை.
இந்தியாவில் உள்ள சைவ ஆதீன மடங்களிலேயே மிகப் பழமையான மடமாக கருதப்படுவது மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம்.
சுமார் 600 ஆண்டுகள் பழமையான இம்மடத்தின் 27-வது ஆதீன கர்த்தராக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள். இந்த நிலையில், ஆதீனம் குறித்த ஆபாச வீடியோ ஒன்று தங்களிடம் சிக்கி இருப்பதாகவும்,
அதை தர வேண்டும் என்றால் தங்களுக்கு பணம் தர வேண்டும் எனவும் சிலர் ஆதீனத்தில் உள்ளவர்களை மிரட்டியதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஆதீன கர்த்தரின் உதவியாளரான விருத்தகிரி என்பவர் அளித்திருந்த அந்த புகாரில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும்,
நேரில் சந்தித்தும், மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் “தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும்” என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
மேலும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் ஒன்றிய தலைவர் விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம்,
வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் தி.மு.க. செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர்” என்றும்,
இதனால் மடத்திலுள்ள அனைவருமே மன உளைச்சலில் தவிப்பதால், மிரட்டும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 25 -ம் தேதியன்று இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சென்னையில் பதுங்கியிருந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் , திருவெண்காடு விக்னேஷ், உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீ நிவாஸ் உட்பட 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும் 5 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில்தான்,
நேற்று (15.03.2024) மும்பைக்கு அருகில் வைத்து அவரை கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர். பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
பாஜகவின் முக்கிய மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கில் கைதானது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அகோரம் கைதானது (Agoram Arrested) எப்படி என்பது குறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“அகோரத்தையும், அவரோடு தலைமறைவாக உள்ள சிலரையும் பிடிப்பதற்காக மார்ச் மாத துவக்கத்திலேயே தனிப்படை அமைக்கப்பட்டு விட்டது.
அகோரத்திற்கு வேண்டிய இடங்கள் அனைத்தையுமே சல்லடையாக சலித்து விட்டனர் தனிப்படையினர். எங்குமே சிக்கவில்லை. செல்போனையும் ஆஃப் செய்து விட்டதால் அவர் இருக்கும் இடம் பற்றி துளியும் தகவல் தெரியாமல் தவித்தோம்.
இதற்கிடையே முன் ஜாமீன் கேட்டு அகோரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவும் நிராகரிக்கப்பட்டதால்,
இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்தாலும், அதன் பிறகு எப்படியும் அவர் வெளியூர் தப்பிச் செல்ல முயற்சி செய்வார் என்பதை அறிந்து அனைத்து ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் கண்காணிப்பை அதிகப்படுத்தினோம்.
இதற்கிடையே, ஏற்கனவே அவர் பயன்படுத்திய செல், சிம் இரண்டையும் தூக்கி எறிந்து விட்டு, புதிய செல்போனில் வேறொரு சிம்மை பயன்படுத்த துவங்கியதை கண்டு பிடித்த, சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு அதன் லோக்கேசனை டிராக் செய்தபடி இருந்தோம்.
ஆந்திரா, கர்நாடகா என மாறி மாறிச் சென்ற சிக்னல் மாகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இருப்பதை காட்டியது.
ஆனால், தனிப்படை ஆய்வாளர் செல்வம் தலைமையிலான 8 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் போலீசார் மும்பை சென்ற போது அங்கிருந்து சுமார் 96 கிலோ மீட்டர் தூரத்தில் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் என்ற ஊரில் அவர் இருப்பதாக காட்டியது.
பின்னர் அங்கிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரமுள்ள நாகோன் என்னும் ஒரு சிறிய பீச் லொகேசனில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்திருக்கிறார் அகோரம். அவர் அங்கு இருப்பதை உறுதி செய்த தனிப்படையினர் அவர் தங்கியிருந்த அறையை விட்டு வெளியில் வரும் வரை பொறுமையாக காத்திருந்தனர்.
ஒரு வழியாக அதிகாலை ஜாலியாக காற்று வாங்க கடற்கரைக்கு வாக்கிங் வந்த அகோரத்தை அலேக்காக தூக்கி விட்டனர் தனிப்படையினர் Agoram Arrested.
வெள்ளிகிழமை அலிபாக் மாவட்ட ஜுடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய அவரை இன்று தமிழகம் அழைத்து வருகின்றனர் தனிப்படை போலீசார். பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுவார்” என்றனர்.
அகோரத்தின் பின்னணி என்ன?
தற்போது தலைமறைவாக உள்ள அகோரம் கடந்த 2021 -ம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்.
தவிர, இவரின் சக நண்பர் ஒருவர் கொலையான வழக்கு உட்பட இவர் மீது கிட்டத்தட்ட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறுகிறது காவல்துறை.
இப்படி, ‘டெரர்’ பீஸாக வலம் வந்த அகோரம் ஆரம்ப காலத்தில் பா.ம.க.வில் இருந்து பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து கடந்த சட்டமன்ற தேர்தலில்,
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் என்பதோடு தற்போது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க பொறுப்பாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.