மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்க்கான சிறப்பு ரயில் இன்று காலை மதுரை வந்தடைந்தது.
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பங்குபெற இருப்பதால் பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்தனர்.
14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் கூடிய இந்த சிறப்பு ரயில் நேற்று இரவு இரவு 11.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து 1,300 அதிமுகவினருடன் புறப்பட்டது.
சென்னை எழும்பூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில், இன்று காலை மதுரை கூடல் நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த சிறப்பு ரயிலின் ஜன்னல் முழுவதும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம் என்று வசனங்களுடன் புகைப்படம் ஒட்டப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் எங்கிருந்து வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்படுகிறனர்.