பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் 1000காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் போட்டியின் போது மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டடுள்ளதோடு சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. போட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக 2000காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேலரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில, மற்றும் சுற்றுலா பார்வையாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஏறாளமான நபர்கள் காயமடைந்தனர்.