நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செம்மலைபடையாட்சி தெரு பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (82) இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பாப்பம்மாள் தனியாகவே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண் அதே பகுதியில் குடியிருந்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மூதாட்டி பாப்பம்மாலிடம் நலம் விசாரிக்க மல்லிகா மூதாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். உடல் ஆரோக்கியத்திற்காக குளிர்பானம் வாங்கி வந்துள்ளதாக கூறி வலுக்கட்டாயமாக தான் கொண்டு வந்திருந்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டிக்கு கொடுத்துள்ளார்.
பின்னர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தன்னுடைய கழுத்தில் இருந்த கவரிங் செயினை மூதாட்டிக்கு போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை வரை மூதாட்டியின் வீடு திறக்கப்படாத கண்டு உறவினர்கள் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் உடனடியாக அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னரே அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.அப்போதான் தன்னுடைய கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி இல்லை என்பதும் மேலும் கழுத்திலிருந்து கவரிங் என்பதும் மூதாட்டிக்கு தெரியவந்தது.
உடனடியாக உறவினர்கள் மூலம் ராசிபுரம் காவல்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து ராசிபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மல்லிகா என்ற பெண் தப்பிச் செல்லும் CCTV காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்கள் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு தான் சம்பாதித்த பணத்தில் நகை போட்டிருந்தார் அதனை தற்போது பெண்ணொருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பறித்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகையை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.