மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையான ஒன்று எனஅண்ணாமலை (Annamalai)கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு,திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது.
நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்.தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்மையில் இதே போல் திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை”என்று பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பொதுமக்களை அவமானப்படுத்தி பேசும் திமுக நிர்வாகிகளின் செயலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,
“பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள்.
“சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் திரு எவ வேலு அவர்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது.
தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழ்நாடு பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.