காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன நிலைமை என்று தமிழக பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது மகன் கருத்தையா ஜெப்ரின்.கடந்த 2ம் தேதி இரவு வெளியில் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை. அவரது மகன் ஜெப்ரின் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தையை கண்டுபிடித்து தருமாறு உவரி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.இந்தநிலையில் ஜெயக்குமார் தன்சிங் உடல், தீயில் எரிந்த நிலையில் அவரது வீட்டருகே உள்ள தோட்டம் ஒன்றில் கிடந்துள்ளது.
தகவலின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய உவரி போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவிட்டு விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, ஜெயக்குமாரின் வீட்டில் சென்று அவரது அறையை சோதனையிட்டபோது, ஜெயக்குமார் தன்சிங் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் லெட்டர்பேடில் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன நிலைமை என்று தமிழக பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.
உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.