திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் (northerners) அதிகமாக தங்கி பணியாற்றி வரும் நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகளும் பரவி வருகின்றது.
இந்நிலையில், பீகார் சட்டசபை வரை தற்போது இந்த பிரச்சனை சென்றுள்ளது. இதனையடுத்து, நேற்று அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமாரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது, வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மேலும், வட மாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
மேலும், வட மாநில தொழிலாளர்கள் (northerners) தாக்கப்படுவதாக கூறப்பட்டு வருவது வதந்தி என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோக்களும் போலி என்றும் தமிழக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து கூறிய வடமாநில தொழிலார்கள் அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வரும் நிலையில், ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் நாங்கள் எங்களது சொந்த ஊருக்கு செல்கிறோம் என்றும், ஒரு சிலர் தவறான வீடியோக்களை பார்த்து விட்டு வதந்திகளை பரப்பி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தவறான வீடியோகளை பரப்புவர்களின் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.