கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த (24.09.23) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு ராணுவ வீரரை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கிய மர்ம நபர்கள் அவரது சட்டையைக் கிழித்து முதுகில் ‘PFI’ என்று எழுதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த (24.09.23) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ராணுவ வீரர் ஷைன் குமார் என்பவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட ஷைன் குமார் இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (EME) கார்ப்ஸில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்திருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஷைன் குமார் கடக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீட்டின் அருகே சிலர் நிற்பதைப் பார்த்தேன். அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் யாரோ ஒருவர் குடிபோதையில் படுத்துக் கிடப்பதாகவும், அந்த நபரை உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்டார்கள். அதன் பின்னர் என்னை தாக்கி என் முதுகில் ‘PFI’ என்று எழுதிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.” என்று ராணுவ வீரர் ஷைன் குமார் தனது புகாரில் தெரிவித்திருப்பதாக கடக்கால் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் உள்பட தொடர்படைய பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மர்ம நபர்கள் 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், PFI கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.