கேரளாவில் AI தொழில்நுட்பத்தின் மூலம் 72 வயது முதியவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு அவரது நண்பரை போல மார்ஃபிங் செய்து நூதன முறையில் பண மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.
சமீப காலமாக வாட்ஸ்அப் மோசடிகள் அதிநவீனமாகி வரும் சூழலில் தற்போது, மோசடிகளுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியும், அவசரகால சூழல்களை உருவாக்கியும் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் மோசடி கும்பல்கள்.
இந்நிலையில், கேரள மாநிலம் கோழிகோட்டைச் சேர்ந்த 72 வயதாகும் ராதாகிருஷ்ணன் என்ற முதியவர் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மோசடியில் சிக்கி ரூ.40,000 பணத்தை இழந்துள்ளார். அதன்படி, பணத்தை இழந்த முதியவருக்கு ஒரு குறுஞ்செய்தியும், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பும் வந்துள்ளது.
முதியவரை தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், நான் உங்கள் நண்பர் எனக் கூறி மருத்துவ அவசரத்திற்காக பணம் வேண்டும் என்று கேட்டு உள்ளார். அப்போது, அதனை உறுதிபடுத்திக் கொள்ள நினைத்த முதியவர் அந்த நபரை வீடியோ அழைப்பில் வரும்படி கூறி உள்ளார். உடனே, வீடியோ அழைப்பும் வந்த நிலையில், அந்த வீடியோ அழைப்பில் அவரது நண்பரின் முகத்தைக் கண்டுள்ளார்.
தொடர்ந்து 30 விநாடிகள் மட்டுமே வீடியோ இந்த அழைப்பு நீடித்துள்ளது. அதன் பின்னர், தனக்கு போன் செய்தது நண்பர்தான் என நம்பிய முதியவர் சந்தேகமின்றி பணத்தைக் கொடுக்க தீர்மானித்தார். அதன்படி, மோசடி நபர் கூறிய தொடர்பு எண்ணுக்கு ரூ.40 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீண்டும் ராதாகிருஷ்ணனிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் அவருக்கு சந்தேகம் வந்த நிலையில், உடனடியாக தனது நண்பரின் தொடர்பு எண்ணில் அழைத்து அவரிடம் பேசி உள்ளார். அப்போது, அவரது நண்பர் தான் பணம் எதுவும் கோரவில்லை என்று சொல்லவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் ராதாகிருஷ்ணன்..
இந்த வகையான செயற்கை நுண்ணறிவு கொண்டு ஏமாற்றப்படும் முறையை ‘Deepfake’ என்று என சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற மோசடிகளை AI தொழில்நுட்பம் வாயிலாக எளிதாக செய்ய முடியும் என்றும், ஒருவரின் புகைப்படம் மட்டும் இருந்தால் போதும். நம் முகத்தை மாற்றி துல்லியமாக நேரலை மார்ஃபிங் செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர். அதாவது, ஒருவரை வீடியோ காலில் அழைக்கும்போதே முகத்தை மாற்றிக்கொண்டு பேசமுடியும்.
இந்த AI தொழில்நுட்பம் நம்பகத்தன்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக, சமூக வலைதள பயனாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், அரசு இதுபோன்ற தொழில்நுட்பத்தின் பயன்கள் மற்றும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.