தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது .
இந்தியாவின் இன்றைய தலைமுறைகள் தங்களது திறமைகளை உலகிற்கு உரக்க காட்டி பல துறைகளில் தங்களது கால்தடத்தை அழுத்தமாக பதித்து வரும் நிலையில் விளையாட்டு துறையிலும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் . அதிலும் குறிப்பாக கபடி விளையாட்டில் ஆண்கள் , பெண்கள் என இருவரும் பல சாதனைகளை படைத்து கலக்கி வருகின்றனர் .
இந்நிலையில் தென் கொரியா நாட்டின் பூசன் நகரில் நடப்பாண்டுக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இந்தியா ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திறமையான அணிகள் பங்கேற்றன.

இந்நிலையில் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரான் அணியும் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணியும் மோதின. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை விழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளது .

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. ஈரான் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் பவன் ஷெராவத் அணிக்கு தேவையான புள்ளிகளை சேகரித்தார். இறுதி வரை சிறப்பாக விளையாடிய அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அட்டகாச வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று சாதனை படித்துள்ள இந்திய அணிக்கு நாட்டு மக்களும் , அரசியல் தலைவர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.