பார்டர் கவாஸ்கர் தொடரின் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து 2 ஆம் நாளான இன்று ஆஸ்ட்ரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்கத்தில் ஹாண்ட்ஸ்கோம், கிரீன் நிதானமாக ஆடினாலும் பின்னர் இந்திய பந்து வீச்சில் சிக்கி தவிக்க தொடங்கியது.
நேற்று வரை 4 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் இன்று வெறும் 11 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் முன்னிலையாக 88 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்கசில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா தொடக்கத்திலே தடுமாற்றம் கண்டது. வந்த வேகத்தில் வீரர்கள் வெளியேறினர். ஆஸ்ட்ரேலியா சுழலில் சிக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்காமல் விளையாடவே பெரும் சீராமமானது. ஒரு பக்கம் குறைவான ரன்னும், மறு பக்கம் விக்கெட் சரிவு என இந்திய அணிக்கு சிக்கல் கூடியது.
ஒரு முனையில் பூஜாரா தனது தடுப்பாட்டத்தால் விக்கெட்டை தக்கவைத்து ரன் குவிக்க, இவருடன் ஜோடியாக ஷ்ரேயாஸ் ஐயர் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடியாக பவுண்டரி, சிக்சர் விளாசினார். இவர் அதிரடியால் ரன் குவிய தொடங்கியது.பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்த ஸ்மித் அடுத்தடுத்து விக்கெட்களை விழ செய்தார். லயன் சுழல் இந்தியாவை வட்டத்துக்குள் சுருட்டியது.இறுதியில் 75 ரன்கள் மட்டுமே கூடுதலாக சேர்த்து இந்தியா ஆள் அவுட் ஆனது.
இந்திய பேட்டிங்கை ஆட்டம் காண செய்த லயன் 8 விக்கெட்களை கைபற்றினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் கைபற்றும் 26 வது 5 விக்கெட் இதுவாகும். 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்ட்ரேலியா நாளை இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.