75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு “ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவம்” என்ற பெயரில் ஓராண்டு கால விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில், மரம் நடுதல், நீர் தானம், தூய்மை பணிகள், சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிப்பது, மோட்டார் சைக்கிள் பேரணி, படக்காட்சி வாகன உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக மோட்டார் சைக்கிள் பேரணி, படக்காட்சி வாகன உலா நிகழ்ச்சி ஆகியவை மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கொடியசைத்து துவக்கி வைக்க வைத்தார். இதில், ஆறு மோட்டார் சைக்கிள்களில் 12 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விருதுநகர், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், ராமேஸ்வரம், காரைக்குடி, திண்டுக்கல் வழியாக சென்னை செல்கின்றனர்.
மேலும், சென்னையில் இருந்து அனைத்து கோட்ட பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பேரணியாக புதுடெல்லி செல்ல இருக்கிறார்கள். இந்த மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஒரு பட காட்சி வாகனமும் செல்ல இருக்கிறது.
ஆஸாதி கா அம்ரித் மஹோற்சவ நிகழ்ச்சி, இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகள் ஆகியவை இந்த படக்காட்சி வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டில்லி சென்று சேர இருக்கிறது.