இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. டெல்டா மற்றும் ஒமிக்ரான் ஆகியவை இந்தியாவில் மூன்றாம் அலையாக பரவ தொடங்கியது முதல் திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்ட வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் மகேஷ்பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், மீனா ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு தொற்றிலிருந்து மீட்டுள்ளனர். அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தொற்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் தற்போது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நோய் என்பது உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு, எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம், மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு, கொரோனா கண்டிருக்கும். அண்ணன் வைகோ, இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம்பெறவும் வலம்வரவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.