பீகார் மாநிலத்தில் பரீட்ச்சைக்கு பிட் அடிக்க தூக்கி போட்ட பேப்பரை காதல் கடிதம் என நினைத்து 12 வயது சிறுவனை மாணவியின் அண்ணன் அடித்து கொன்றுள்ளார்.
பீகார் மாநிலத்தில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
போஜ்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தயாகுமார் அங்குள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது சகோதரி 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் சிறுவனின் சகோதரி 6ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு எழுதிய நிலையில், சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ தயாகுமாரும் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அதன்படி தேர்வு அறைக்கு வெளியே இருந்து தயாகுமார் பிட் பேப்பரை சகோதரி இருக்கும் இருக்கைக்கு தூக்கி வீசியுள்ளார். அப்போது ஒரு பிட் பேப்பர் தவறுதலாக வேறு ஒரு மாணவிக்கு அருகே விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த மாணவி, தனக்கு தயாகுமார் லவ் லெட்டர் கொடுத்துள்ளதாக தவறாக புரிந்து கொண்டு அதேபள்ளியில் படிக்கும் தனது சகோதரரிடம் இந்த கூறி உள்ளார். இதனைக்கேட்டு கோபமடைந்த சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாகுமாரை தூக்கி சென்று அடித்தே கொன்றுள்ளார். பின்னர் சிறுவனின் உடலை சிதைத்து ரயில்வே டிராக் பக்கம் வீசி சென்றுள்ளனர்.
இதற்கிடையே தயாகுமாரின் பெற்றோர் மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த நிலையில், நான்கு நாள்கள் கழித்து சிறுவனின் உடல் பாகங்களை போலீஸ் கைப்பற்றியது. பின்னர் விசாரணையில் உண்மை தெரியவந்த நிலையில், மாணவியின் அண்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரும் சிறார் என்பதால் அவர்களை சிறார் சிறையில் அடைத்தனர்.