டெல்லியில் அனுமன் ஜெயந்தி அன்று நடைபெற்ற கலவர பதற்றம் இன்னும் ஓயாத நிலையில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவின் தலைநகரத்தை அதிரவைத்துள்ளது.
டெல்லி மயூர் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் ஜித்து சவுத்ரி (வயது 42). பாஜக பிரமுகர். இவர் நேற்று இரவு மயூர் விஹார் 3வது பேஸ் பகுதியில் உள்ள தனது வீட்டு அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றனர். இதில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார். அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தடயங்கள் சேகரிப்பு இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜித்து சவுத்ரியின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை இந்த கொலை சம்பவத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் அலட்சியம் கூடாது என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 16 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கலவரம் ஏற்பட்டது. ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர், வெறுப்பு கோஷங்கள் எழுப்பி மசூதிக்குள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கலவரம் வெடித்தது. இந்த நிலையில் கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல், எதிர் தாக்குதல் நடத்திய 23-க்கும் மேற்பட்டஇஸ்லாமியர்களை கைது செய்தும்,அவர்களின், வீடு, கடைகளை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதற்கிடையே, கடந்த 1 வாரமாக தொடர்ந்து டெல்லியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாஜக பிரமுகர் சுட்டுகொலை செய்யப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.