தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குறைவடைந்து வந்த கொரோனா பரவல் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட உருமாரிய வைரஸான ஒமைக்ரானும் அதிதீவிரமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்தப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டோருக்கு ‘இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ செயளாலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் தெரிவித்த ம.சுப்ரமணியன் தமிழ்நாட்டில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் பொங்கலுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் ஊருக்கு சென்றதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்பது இரு நாட்களில் தெரியவரும் என தெரிவித்த அவர், மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.