நீதிக்காக போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளிடம் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் தவறாக நடந்துகொண்டது உண்மை என சர்வதேச மல்யுத்த போட்டிகளின் நடுவர்களில் ஒருவரான ஜக்பீர் சிங் கூறிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த நம் தேசத்தின் பொக்கிஷங்களாக இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று உரிய மரியாதையும் முறையான பாதுகாப்பும் வழங்கப்படுகிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறியே . அதிலும் குறிப்பாக பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் .
அந்தவகையில் தேசத்தின் இரும்பு தூண்களான மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . பயிற்சிக்காக வரும் இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
வீரர்களின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று வரை குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளிடம் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் தவறாக நடந்துகொண்டது உண்மை என சர்வதேச மல்யுத்த போட்டிகளின் நடுவர்களில் ஒருவரான ஜக்பீர் சிங் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறிருப்பதாவது : மல்யுத்த வீராங்கனைகளிடம் மதுபோதையில் பலமுறை பிரிஜ் பூஷன் அத்துமீறலில் ஈடுபட்டதை தானே கண்ணால் பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
அனைத்து குற்றச் சாட்டுகளையும் பிரிஜ் பூஷண் மறுத்திருப்பதைப் பற்றி கேட்டதற்கு, திருடன் எப்போதாவது தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வானா என்று அவர் எதிர்கேள்வி எழுப்பினார்.
பாலியல் புகார் தொடர்பாக வரும் 15-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளித்திருந்ததை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நடுவர் ஜக்பீரின் பேட்டி தற்போது நாடு முழுவதும் பாரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது .
நாளுக்கு நாள் பதற்றத்தை ஏற்படுத்தும் மல்யுத்த வீரர்- வீராங்கனைகளின் போராட்டம் வலுவடைவதால் இதுகுறித்து மத்திய அரசு விரைந்து செயல்பட்டு பிரிஜ் பூஷன் மீது கொடுக்கப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விளையாட்டு வீரர்களும் , அரசியல் தலைவர்களும் , திரை பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .