நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது.
நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது.
ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு சபைகளில் உரையாற்றினார். இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-ந் தேதி நிறைவடைந்தது.
இதனையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த முதல் அமர்வானது கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் இரு சபைகளும் தனித்தனி நேரங்களில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் இரு சபைகளில் வழக்கம் போல முற்பகல் கூடுகிறது. இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த கூட்டத் தொடரில் என்றும் உக்ரைன் விவகாரம், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இதனிடையே நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன. தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டுள்ளது குறித்து விவாதிக்க லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். நீட் விவகாரத்தை திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளனர்.