சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேரும் கருப்பு உடை அணிந்தவாறு கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ்வாறு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது, சாமுவேல் திரவியம், சென்னை மாநகர மாமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி”மாநகராட்சியின் பட்ஜெட் சிறப்பான முறையில் உள்ளது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பில் அதனை வரவேற்கிறோம்.
இன்றைக்கு கருப்பு உடை அணிந்து வந்தது ஏனென்றால், இந்த நாட்டையே தங்களது உயிர் மூச்சாக நினைக்கும் எங்கள் தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் பேரியக்கத்தையும் திட்டமிட்டு அவமதிக்கும் வகையில், ஒரு சாதாரண குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, அதுமட்டுமின்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்துள்ளனர்.
இந்திய நாட்டிற்கு தங்களின் பல்லாயிரம் கோடி சொத்துகளை வாரிவழங்கியது நேரு குடும்பம். ஆனால் இன்றைக்கு ராகுல்காந்தி அவர்கள் வசிக்கும் அரசு குடியிருப்பை உடனடியாக அவர் காலி செய்ய வேண்டும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.
இதையெல்லாம் கண்டிக்கும் வகையில் மாமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்தோம். நாளைய கூட்டத்திற்கும் தினமும் கருப்பு உடை அணிந்து வர இருக்கிறோம். அந்த கூட்டம் முடிந்த உடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
பாசிச பாஜக அரசைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நாட்டின் பொருளாதாரம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. அவையெல்லாம் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்கள் தலைவர் இந்த நாட்டைப் பற்றி வெளிநாட்டில் பேசினார். அந்த கருத்தில் எந்த தவறும் இல்லை.
ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுக்க அவர் கடிதம் அளித்து இருந்தார். ஆனால் அவரை நாடாளுமன்றத்தில் பேச விடக்கூடாது என்பதற்காகவே அந்த வழக்கை துரிதப்படுத்தி, தண்டனை கொடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி உள்ளனர்.
பாராளுமன்றத்தில் அவரை பேசவிட்டால் தங்களது குற்றங்கள் வெளியே வந்துவிடும் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்துள்ளனர். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அந்த வழக்கு பொய் வழக்கு என காங்கிரஸ் கட்சி நிரூபிக்கும்” என்றார்.