குன்னூரில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பேருந்து உரிமையாளர், ஓட்டுனர் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து குன்னூர் மரப்பாலம் அருகே 30-9-2023 அன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட அதில் பயணித்த 61 பேரில் முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரனையில் ஓட்டுநர் வாகனத்தை அஜாக்கிரதையாக ஒட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.
இதனை அடுத்து பிரியா டிராவல்ஸ் சுற்றுலா பேருந்தின் உரிமையாளர் சுப்பிரமணி, ஓட்டுநர் முத்துக்குட்டி, கோபால் மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகிய நான்கு பேர் மீதும் குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறனர். இந்த மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் வாகன விபத்துகளை தவிர்க்க மலைப்பிரதேசத்தில் பயணிக்க கூடிய சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மலைப்பிரதேசங்களில் வேகக்கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் அனுபவம் பெற்றவர்கள் மலைப்பிரதேசங்களில் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், வாகனத்தை அதிவேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.