காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் போதிய நீர் இல்லை என கூறி கர்நாடக அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், தமிழகத்துக்கு காவிரிநீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறைப்படி தமிழகத்திற்கு உண்டான நீரை கொடுக்க வேண்டும் என்று ஒருபுறம் தமிழகத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காவிரி விகாரத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
காவிரி விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பழைய வீடியோக்களை தற்போது நடந்தது போல சித்தரித்து வதந்தி பரப்புகின்றனர். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் பழைய வீடியோக்கள் போஸ்டர்களை சிலர் பரப்புகின்றனர் என்றும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறி உள்ளார்.