ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்று அழைக்கப்படும் கிணற்றில் விலகாத மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்பட்ட நிலையில் அதனை ஆராய்ந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இது இயற்கையான கிணறு என்றும் இதில் மர்மங்கள் எதுவும் இல்லை என்றும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்து காட்டி உள்ளனர்.
ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது.
இந்த கிணறு நரகத்தின் கிணறு என்று அப்பகுதியினரால் அழைக்கபடுகிறது. இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாகவும் வதந்திகள் பரவியது.
சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்த நிலையில் தற்போது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 10 பேர் முதல்முறையாக கிணற்றுக்குள் கயிறு மூலம் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர்.
பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுவதாகவும் பாம்புகள், பூச்சிகள் காணப்படுவதாகவும் கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே அழகான நீர் வீழ்ச்சி உள்ளது என்றும் கூறியுள்ளனர்.