ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைவடைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீனா உள்ளிட்ட 40 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமைக்ரான் தொற்று இந்தியா முழுவதும் இதுவரை 25 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்த அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினரும், மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு வெள்ளிக்கிழமை அன்று ஆலோசனை மேற்கொண்டது.
அதில், கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கக்கோரி, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு விரைவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.