மன்னார் வளைகுடா அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று காரணமாக கடந்த நவம்பர் மாதம் கடும் மழை கொட்டித் தீர்த்தது. அதன் பின் டிசம்பர் மாதம் மழை குறைந்து சில இடங்களில் மட்டும் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெயவித்துள்ளது.
அத்துடன் வரும் 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.