ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் குறைவடைந்து வந்த கொரோனா பரவல் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட உருமாரிய வைரஸான ஒமைக்ரானும் அதிதீவிரமாக பரவி வருகிறது.
இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன் படி பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களின் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்படிக்க வேண்டும் எனவும் அதனை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் அவருக்கு இருப்பதால் சந்திரபாபு நாயுடு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.