வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, சென்னையில் 34 இடங்களில் ’ரெடிமேட்’ முறையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், மழைநீர் வடிகால் கால்வாய்களை இணைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெடிமேட் முறையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
இதன்படி ஏற்கெனவே செய்து தயார்நிலையில் இருக்கும் வடிகாலை ஒத்த கட்டுமானத்தைக் கொண்டு சாலையின் குறுக்கே வடிகால் அமைக்கப்பபட்டு வருகிறது. ப்ரீசெட் (precest) எனப்படும் இந்தக் கட்டுமானத்தை பயன்படுத்தி குறைவான நேரத்தில் கால்வாய்களை அமைக்க முடியும். இதன்படி கொளத்தூர் பகுதியில் வேலவன் நகர் பிரதான சாலையில் 10 மீட்டர் நீளமுள்ள கால்வாய், 36 மணி நேரத்திற்குள் அமைக்கப்பட்டது.
தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், அவசரத் தேவையாக மழைநீர் வடிகால்களில் இணைப்பு வழங்கும் வகையில், 34 இடங்களில், ‘ரெடிமேட் கான்கிரீட்’ பயன்படுத்தி விரைந்து மழைநீர் வடிகால் அமைக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது.
இதன்படி பேப்பர் மில்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, சேமியர்ஸ் சாலை, ஆர்.கே.சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை, பேசின் சாலை, வேலு சாலை, எம்ஜிஆர், சென்ட்ரல் ரயில் நிலையம், எஸ்எசி போஸ் சாலை, பிரகாசம் சாலை, வண்ணாக் குட்டை, சிட்கோ நகர் மெயின் சாலை, நேதாஜி சாலை, கல்லூரிச் சாலை, எத்திராஜ் சாலை, திருவல்லக்கேனி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் இதுபோன்று ரெடிமேட் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.