சென்னையில் பொழியும் பெருமழையால் மாநகரப் பேருந்துகளுக்கு பாதிப்பில்லை என்றும் பொதுமக்களுக்கு தேவையான பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்
சென்னை மந்தைவெளி மற்றும் பட்டினப்பாக்கம் போக்குவரத்துக் கழக பணிமனையில் போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து பணிமனைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு உடன் இருந்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;
சென்னையில் பொழியும் பெரும் மழையால் எந்த பேருந்துகளுக்கும் பாதிப்பில்லை. பொதுமக்களுக்கு தேவையான பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது 17,576 பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக எந்தவித போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது.
சென்னையை நோக்கி வருபவர்களுக்கு பேருந்துகள் தயாராக உள்ளது. அத்தியாவசிய தேவை காரணமாக சென்னையை நோக்கி வருபவர்களுக்கு போக்குவரத்து தடையின்றி கிடைக்கிறது.