2015 வெள்ளத்துக்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகத் தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
மாநிலத்தின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் 2015 பெருவெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியதற்கான காரணம் என்ன? எனவும் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
2015-ல் வெள்ளம் ஏற்பட்டதற்கு பிறகும் மழைநீர் தேங்காமல் இருக்க என்னதான் செய்துகொண்டிருந்தீர்கள் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை மாநகராட்சியின் அலட்சியத்திற்காக, அதிருப்தி தெரிவித்துள்ளது.
பாதி நாள் தண்ணீருக்காகவும், மீதி நாள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கின்றனர். மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது எனவும் கருத்து தெரிவித்த நீதிமன்றம், சாலையை அகலப்படுத்துவது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நிலைமை ஒரு வாரத்திற்குள் சீராகும் என நம்புவதாகவும் இல்லை என்றால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.