சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்து அதிரடி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஆவடி கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி நெடுஞ்சாலையில் போரூர் ஏரி சிவன் கோவில் சந்திப்பில் இருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 26.2.2022 (இன்று) மற்றும் 27.2.2022 (நாளை) தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சோதனை ஓட்டம் முறையிலும் பின்னர் மேற்படி போக்குவரத்து மாற்றம் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இந்த பணிக்கான தற்காலிக போக்குவரத்து மாற்றம் பின்வருமாறு:
மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பில் இருந்து (போரூர் ஏரி சிவன் கோவில் அருகே) குமணன்சாவடி சந்திப்பு வரை போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்) செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் (வேன், டிரக், பஸ் மற்றும் வணிக வாகனங்கள்) மாற்று வழியில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போரூரில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி சாலையில் (எஸ்.எச் 55) பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயம் இந்த சாலையில் வலது புறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு-பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன் சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல் மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படுகின்றன.
சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமணை, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன் சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையாளரின் இணையதள முகவரியான dcpavadi.traffic@gmail.com மற்றும் கட்டுமான பணி அதிகாரி இணையதள முகவரிக்கு sundramoorthyb@kecrpg.com அனுப்பலாம்.
அதேப்போல் பொதுமக்களின் ஆலோசனையை ஆவடி காவல் ஆணையரகத்தின் டிவிட்டர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து செல்போன் எண்: 8056217958 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.