சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இக்கோவிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக கோட்டாட்சியர் ரவி நேற்று சிதம்பரத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
கோட்டாட்சியர் தனது அறிவிப்பில், சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகள் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இந்நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில், இறுதி முடிவு எடுக்கும் வகையில் பல்வேறு நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
எனவே அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், போராட்டக்குழுவினர் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர் அரசின் முடிவு வரும் வரையில் சிதம்பரம் நகர பகுதியில் எவ்வித போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது என்றும் மேலும் கூட்டமாக கூடி ஆலோசனை மேற்கொள்ளுதலும் ஒரு மாத காலத்திற்கு செய்யக்கூடாது என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக நேற்று தெரிவித்திருந்தார்.இதற்கிடையே 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், சிதம்பரம் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடராஜர் கோவில் முன்பும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.போராட்டங்களை தவிர்க்க சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் நலன் கருதி உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் ரவி அறிவித்துள்ளார்.