தேனி பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் சம்பல் குட்டக்குடி, ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மலை உச்சியில் 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாறை சரிவு, மலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே 2021 ஜூன் 17 இல் இதுதொடர்பான மனு அளித்துள்ளதாக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டதுடன், நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் குறிப்பாக வனப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை கட்டமைப்பு சிதைவுகளும் விவகாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. எனவே தேனி பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகள் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.