சேலத்தில் இன்று (11.06.23) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சேலம் சென்றார்.
அதனை அடுத்து இன்று, சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 1,713 சதுர பரப்பில் நான்கு அடி உயரத்தில் பீடமும் மற்றும் 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ள நிலையில், அந்த சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும், ரூபாய் 96 கோடியில் நவீன வசதிகளோடு கட்டப்பட்டு இருக்கும் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரண்டு அடுக்குகளிலும் பேருந்து நின்று செல்லும் வகையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மறு சீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானம், வ உ சி மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாளை (12.06.23) மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை ஒட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை வாழ்த்தி வரவேற்கும் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.