senior journalist Shanmuganathan passesaway : மூத்த பத்திரிகையாரான ஐ. சண்முகநாதன் அவர்களின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..
“மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ. சண்முகநாதன் அவர்கள் இன்று (03-05-2024) காலை 10.30 மணிக்கு வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
இதையும் படிங்க : ஐ.சண்முகநாதன் மறைந்தாரே! – வைரமுத்து இரங்கல்!
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் காலத்தில் 1953-ஆம் ஆண்டு அந்நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்த சண்முகநாதன் அவர்கள் 2023-ஆம் ஆண்டு இதழியத் துறையில் எழுபதாண்டுகளைக் கடந்த பெருமைக்குரியவர்.
தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர். “ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு””கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புகளுக்கும் சொந்தக்காரரான சண்முகநாதன் அவர்களது மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இவரது இறுதிச் சடங்குகள் நாளை (04-05-2024) காலை 8 மணி அளவில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது senior journalist Shanmuganathan passesaway.