வதந்திகளை பரப்புதல், பண மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகளை (social media accounts) சீன அரசாங்கம் கண்டுபிடித்து நீக்கியுள்ளனர்.
சீனாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வதந்திகளை பரப்புதல், பண மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் அரசாங்கத்திற்கு வந்த நிலையில், அந்தப் புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் முதல் சீன அரசாங்கம் தீவிர சோதனையை மேற்கொண்டு வந்தது.
இதில் சினா, வெய்போ, வீசாட் போன்ற முக்கிய சமூக வலைதளங்களில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66,000 போலி சமூக வலைதள கணக்குகளை (social media accounts) கண்டுபிடித்து அதனை மூடி உள்ளதாக சீனாவின் இணையதள விவகார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் டிக் டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் மட்டும் சுமார் ஒன்பது லட்சம் கணக்குகள் தவறான கருத்துக்களையும், தகவல்களையும் பதிவிட்ட காரணத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.