கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி.. – தமிழக முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட காவல் துணை ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவரும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். நேற்றிரவு நவல்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார்.

அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றதையடுத்து சந்தேகமடைந்த பூமிநாதன் அவர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார்.
திருச்சி பிரதான சாலையிலுள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே சென்ற போது பூமிநாதன் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 திருடர்களை வளைத்து பிடித்தார்.

இருவரும் மாட்டிக் கொண்டதை தெரிந்து கொண்ட மற்ற திருடர்கள், பூமிநாதனிடம் அவர்களை விட்டுவிடுமாறு கூறி உள்ளனர். ஆனால் பூமிநாதன் மறுக்கவே அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே காவல் துணை ஆய்வாளர் பூமிநாதன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட காவல் துணை ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts