ஆடு திருடர்களை விரட்டிச்சென்ற போலீஸ் வெட்டிக்கொலை – திருச்சி அருகே பயங்கரம்..!

ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவரும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நவல்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார். அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர். ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட பூமிநாதன் அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார்.

அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் உள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது பூமிநாதன் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை வளைத்து பிடித்தார்.

இருவரும் மாட்டிக் கொண்டதை தெரிந்து கொண்ட மற்ற திருடர்கள், பூமிநாதனிடம் பிடித்தவர்களை விட்டுவிடுமாறு கூறி உள்ளனர். ஆனால் பூமிநாதன் முடியாது என மறுக்கவே அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலை சுமார் 5 மணியளவில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பூமிநாதன் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற காவல்துறை துணை ஆய்வாளர் வெட்டிக்கொலை
செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Total
0
Shares
Related Posts