டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணிகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் இரண்டு நாட்கள் டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இதற்காக காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் தமிழக முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்ல உள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி பருவம் துவங்கி உள்ளது. இதற்காக, கடந்த 24-ம்தேதி, குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 4,000 கி.மீ., தூர்வாரப்பட்டு உள்ளது.
மேலும், 900 கி.மீ.,க்கு மேல் தூர்வார வேண்டி உள்ளது. அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நிறைவுடையும் நிலையிலும் உள்ளன.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வின் போது டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தில் பொது புதுக்கோட்டையில் 3 இடங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். நாளை நாகை, மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்க உள்ளார்.