இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து சிவகங்கை, புதுக்கோட்டைக்கு நாளை பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தமிகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வடிகால் தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மதுரைக்குச் செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். இதன் காரணமாக தமிழக முதல்வர் இன்று மாலை 4 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்கிறார்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார். பின்னர் இரவு மதுரையில் தங்கும் முதலமைச்சர், நாளை மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை செல்கிறார். சிவகங்கையில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கும் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு நடைபெறும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். பின்னர் இரவு 8 மணிக்கு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் நாளை சென்னைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.