எடப்பாடி பழனிசாமியின் புத்தி அது, அவரை போன்று அனைவரும் இருப்பார்கள் என கருத்தி கொண்டு இருக்கிறார் என சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இரவு சென்னைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு பயணத்தை விமர்சனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஏழை பங்காளனாகவும், ஊழலை ஒழிக்கும் போராளியாகவும், சாமானிய மக்களின் தோழனாகவும் நடித்து பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை நம்ப வைத்து,
வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும்,அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச் சுற்றுலா சென்று வந்தவர்தான் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.
பிறகு ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றார்.
இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றிருந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் முக ஸ்டாலின் , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புத்தி அது, அவரை போன்று அனைவரும் இருப்பார்கள் என கருதிக் கொண்டு இருக்கிறார். மேலும் இது குறித்து தங்கம் தென்னரசு விளக்கமாக பதில் அளித்து இருந்தார். இது பற்றிய கருத்துக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை என தெரிவித்தார்.