மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.
இருப்பினும் மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்,மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் #CycloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.