கோவையில் பள்ளி ஆசிரியை ஒருவர் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை மாட்டுக்கறி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என்று கூறி கன்னத்தில் அறைந்தும், ஷூவை துடைக்க வைத்தும் கொடுமைப்படுத்தியதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அபிநயா, அந்த மாணவியை கடந்த 2 மாதங்களாகவே துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இதனிடையே சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் ஆசிரியை அபிநயா, உன் பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என கேட்டுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி கூறிய நிலையில், மாட்டிறைச்சி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என ஆசிரியை கூறியுள்ளார். அப்போது அந்த மாணவி தமது பெற்றோரையும் அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்த வேண்டாம் என கூறியதால், என்னையே எதிர்த்து பேசுகிறாயா எனக் கூறி, மாணவியை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், மாணவி தனது பெற்றோருடன் சென்று தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் முறையிட்டுள்ளார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், பிரச்னையை திசை திருப்பிவிடுவேன் என தலைமை ஆசிரியரும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், சக மாணவிகள் முன்னிலையில் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தி, மாணவியை அவமானப்படுத்தியதுடன், மாற்றுச்சான்றிதழ் வழங்கிவிடுவோம் என மிரட்டியதாக கூறபடுகிறது. இதனால், அச்சமடைந்த மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகாரளித்து உள்ளார்.
அந்த புகாரில், பள்ளியில் தனக்கு நேர்ந்த துயரம் பற்றியும், ராஜ்குமார் என்ற ஆசிரியர் தன்னை ஒருமையில் அழைத்து அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு மாணவி பேசிய வீடியோ புகார் ஒன்றையும் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அவர்கள் கூறுகையில்.. “மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. விரைவில் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதியளித்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரசுப் பள்ளியில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.