coimbatore : கோவையில் சுமார் 15 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த தாய் மற்றும் மகள் வீட்டில் ஏதும் சமைத்து உண்ணாமல் வெளி உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு, சுமார் 4 டன் குப்பைகளை வீட்டிற்குள்ளேயே சேமித்து வைத்திருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த இரு பெண்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் (coimbatore) ராம்நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வயதான தாய் மற்றும் அவரது மகளும் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அக்கம் பக்கத்தினர் யாருடனும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதனால் இந்த இரு பெண்கள் குறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கூட எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.
இதையும் படிங்க : மூடப்படுகிறதா அம்மா உணவகங்கள்?- EPS கண்டனம்!!
தாயும் மகளும் 15 வருடங்களாக தங்கள் வீட்டை சுத்தம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே உணவு கழிவுகள், குப்பைகளை சேமித்து வந்துள்ளனர்.
இதனால் எலி மட்டும் கரப்பான் பூச்சிகள் தொல்லையாலும், குப்பைகளின் துர்நாற்றத்தாலும் எரிச்சலடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக ஈர நெஞ்சம் மஹேந்தரன் என்ற சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி சம்பந்தப்பட்ட குடியிருப்பிற்குள் நுழைந்த ஆர்வலர் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர், வீட்டில் பெண்களுக்கு தெரியாமல் தனது செல்போன் மூலம் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை படம் பிடித்து மாநகராட்சி பணியாளர்களுக்கு தெரியப்படுத்தினார்.
அதன் அடிப்படையில் அங்கு லாரியுடன் வந்த பணியாளர்கள் வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளிச் சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து மட்டும் சுமார் 4 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம வீட்டில் குடியிருந்த பெண்களை அழைத்துச் சென்று மனநல பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பக்கத்து வீட்டார் கோரிக்கை விடுத்துள்ளனர்.